புனேவில் மூதாட்டி, குழந்தை பலி: பன்றிக் காய்ச்சல் சாவு 19 ஆக உயர்வு
புனே, வியாழன், 13 ஆகஸ்ட் 2009( 11:39 IST )
ஸ்வைன் ஃபுளூ எனப்படும் பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்குதலுக்கு புனேவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி இன்று உயிரிழந்தார். இதையடுத்து இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் பரவி வரும் பன்றி காய்ச்சல் நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருவதால் மத்திய அரசு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
புனேவில் உள்ள சையாத்ரி முனோட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 மாதக் குழந்தை, சுவாசக் கோளாறு காரணமாக இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தது. இந்நிலையில் காலை 11 மணியளவில், 75 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்ததால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.