Sunday, October 4, 2009

தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை தருவது குறித்து பரிசீலனை





சென்னை, அக். 3: தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நிரந்தரமாக தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என்று காஞ்சியில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பான இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தியும், இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வு, தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரிடம் இந்தக் கடிதத்தை தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்தார்.
இந்த நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக முதல்வர் கருணாநிதியுடன், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:
நடப்பு அரசியல் குறித்தும் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்தும் இந்த சந்திப்பின்போது முதல்வர் கருணாநிதி என்னுடன் விவாதித்தார்.
தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்தும் விவாதித்தோம். இதுகுறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பரிசீலனைக்குப் பிறகே இதுபற்றி முடிவு செய்யப்படும்.
இலங்கையில் முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களை அவர்களது வாழ்விடங்களில் திரும்பவும் குடியமர்த்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருணாநிதி சில கருத்துகளைத் தெரிவித்தார்.
அதுதொடர்பான என்னுடைய கருத்துகளையும் நான் அவரிடம் தெரிவித்தேன். பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோரிடம் கலந்து பேசி இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ப. சிதம்பரம்.