Friday, December 4, 2009


மும்பை: இந்திய அணியின் கேப்டன் டோணி மும்பை டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். அவர் சதமடிப்பதற்காக காத்திருந்து சரியாக 100 ரன்கள் எடுத்ததும் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது இந்தியா.

மும்பை டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா அபாரமாக ஆடி பெரும் ஸ்கோரை எட்டியது.

வீரேந்திர ஷேவாக் 293 ரன்களைக் குவித்தார். முரளி விஜய் கிருஷ்ணா 87, டிராவிட் 74, சச்சின் 53, வி.வி.எஸ்.லட்சுமண் 62 ரன்களை எடுத்தனர்.

இவர்களின் ஆட்டத்தால் இந்தியா பெரிய ஸ்கோரை எட்டியது. இந்த நிலையில் ஆட வந்த கேப்டன் டோணி நிதானமாக ஆடி சதம் போட்டார்.

இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டிய நிலையிலும் ஆட்டம் டிக்ளேர் செய்யப்படவில்லை. காரணம், டோணி செஞ்சுரியை நோக்கி போய்க் கொண்டிருந்ததால். ஒரு வழியாக 154 பந்துகளைச் சந்தித்து 100 ரன்களை டோணி எட்டியதும் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் எடுத்த நிலையில் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது.

இலங்கை தரப்பில் முரளீதரன் 4 விக்கெட்களையும், ஹெராத் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

தற்போது இலங்கையை விட இந்தியா 333 ரன்கள் லீடிங்கில் உள்ளது.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது.

பரணவிதனாவும், தில்ஷானும் ஆட்டத்தைத் தொடங்கினர். இன்றைய ஆட்ட நேர இறுதியில், விக்கெட் இழப்பின்றி 11 ரன்களுடன் இன்றைய நாளை முடித்தது இலங்கை. பரணவிதனா 8 ரன்களும், தில்ஷான் 3 ரன்களும் எடுத்துள்ளனர்.

சாதனையைத் தவற விட்ட ஷேவாக்...

முன்னதாக வீரேந்திர ஷேவாக் முச்சதம் அடித்து புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை தவற விட்டார். இதற்கு முன்பு பிராட்மேன், லாரா ஆகியோர் 2 முச்சதங்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர். அதேபோல ஷேவாக்கும் 2 முச்சதங்களைப் போட்டுள்ளார். இன்று மூன்றாவது முச்சதம் போட்டால் புதிய உலக சாதனையாக அது அமைந்திருக்கும்.