மதுரை, செப்.2 (டிஎன்எஸ்)
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்வதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் கலந்து கொள்கின்றன.
இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பெங்களூரில் பயிற்சி முகாம் நடந்தது. இந்திய அணிக்கு 11ஆம் தேதிதான் முதல் போட்டி என்பதால் அவர்கள் 9ஆம் தேதி கொழும்புக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
இதற்கிடையே மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஜோயஸ்பவுல் அந்தோணி என்பவர், இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
"செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும் கலந்து கொள்கிறது.
இலங்கை அரசு கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், குண்டுகளை பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது. தற்போது தமிழர்கள் அந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பினால் சர்வதேச சமூகம் இந்தியாவை மதிக்காது. எனவே இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், துரைசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், `இலங்கையில் தமிழர்களை நிர்வாணமாக்கி துன்புறுத்துகின்றனர். பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின் பாகிஸ்தானில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்கவில்லை.
அதுபோல் இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்திய அணியை அங்கு அனுப்பக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைப்பதாக தெரிவித்தனர்.
அப்போது வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார், அடுத்த விசாரணைக்குள் கிரிக்கெட் போட்டி முடிவடைந்து விடும் என்றும், எனவே விரைவில் எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த வழக்கில் ஆஜராகி வாதாட உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வக்கீல்கள் 513 பேர் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளதாகவும், அதையும் இந்த நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் உள்துறை செயலாளர், வெளியுறவுத்துறை செயலாளர், மத்திய இளைஞர் நலன்-விளையாட்டுத் துறைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment